Thursday, May 12, 2005

அம்பிகாவதி பாடல்கள்

மன்னர் மகளை அவர் முன்னே புகழ்ந்து பிறகு சப்பைகட்டு கட்டிய பாடல்

இட்டடி நோவ, எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சுமந்து மருங்கு அசையக் - கொட்டிக்
கிழங்கோ கிழங்குஎன்று கூறுவாள் நாவில்
வழங்குஓசை வையம் பெறும்

பொருள்:-

மருங்கு - இடை

அமராவதியை நினைத்து உருகுதல்

உருகி உடல்கருகி உள்ளீரல் பற்றி
எரிவது அவியாது என்செய்கேன் - வரியரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு

பொருள்:-
அரவம் - பாம்பு
அவியாது - ஆறாது


பழகுவதற்காக திருமகளையும் பழகியபின் இவளையும் படைத்தானோ நான்முகன் பிரம்மன் ?

மய்வடிவக் குழலியர்தம் வதனத்தை
நிகரொவ்வா மதியே, மானே
செய்வடிவைச் சிற்றிடையைத் திருநகையை
வேய்த்தோளைத் தெய்வமாக
இவ்வடிவைப் படைத்தவடிவு எவ்வடிவோ ?
யானறியேன் உண்மை யாகக்
கய்படியத் திருமகளைப் படைத்திவளைப்
படைத்தனன்நல் கமலத் தோனே..


பொருள்: -

மய்வடிவக் குழலியர் - மை போன்ற கூந்தல் பெண்டிர்
வேய்ததோளை - மூங்கில் போன்ற தோளை
கய்படியத் - கை பழகுவதற்காக

மகளின் காதலை அறிந்த கேட்ட மன்னன் வெகுண்டெழுந்தது

கண்டீரோ காணம்பி காபதி செயும்பிழையைக்.
கண்டீரோ நம்மீதில் கள்ளம்இல்லை - உண்டோகாண்
ஆற்றாத கோபம் அடங்கஇவ னைஒட்டக்
கூத்தா,என் செய்திடலாம் கூறு


பொருள்:-

என்மீது பிழையில்லை. பிழைசெய்த அம்பிகாபதியை என் செய்யலாம் என ஒட்டக்கூத்தனை வினவினார்

ஒட்டக்கூத்தன் கூறிய தண்டனை

பனிப்பபகையோன் மாமரபின் பார்த்திபனே, சோழா,
உனக்கினியான் சொல்லுவது ஒன்றுண்டோ ? - கனத்த
பிழைசெய்தான் அன்னைக்குப், பின்பார்க்க வேண்டா
கழுவினிலே ஏற்றிவிடல் காண்.


பொருள்:-

தாய் போன்றவளுக்குப் பிழைசெய்தவனை கழுவில் ஏற்று.

- இதன் பின் இறைவனை பற்றி 100 பாடல் பாடினால் தன் மகளைத்தருவதாக மன்னன் போட்டி இடுகிறான். தவறாக கணக்கிட்ட அமராவதி 99 பாடலிலேயே வெளியே எட்டிப் பார்க்கிறாள்

திரையை விளக்கி வெளியே தோன்றிய அமராவதியைக் கண்ட அம்பிகாவதி போட்டியை மறந்து பாடிய காமத்துக்பால் பாடல்

சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழையூசல் ஆடத்துவர் கொள்செவ்வாய்
நற்றேன் ஒழுக நடன சிங்கார நடைஅழகின்
பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே.

பொருள்:-

தரளவடம் - முத்துமாலை
துற்றே - நெருங்கி
குழையூசல் - காதணி
பொற்றேர் - பொன்னாலான தேர்போன்ற உடல் உள்ளே இருக்கத்

என்ன பாவம் செய்தாய் - தண்டனை இனி தவிர்ககமுடியாது என சோழன் பாடியது

வீரமுண்டோ மதன்கை அம்பினால் வெந்து வீழுகைக்கு
நேரமுண்டோ வஞ்சி நேர்பட்ட காலையில் நெஞ்சைவிடப்
பேரமுண்டோ சொல ஓண்ணாத காமப் பெருநெருப்புக்கு
ஈரம்உண்டோ ஐயனே என்னபாவம் இனிச்சொல்வதே.

பொருள்:-

நேரமுண்டோ - வஞ்சி முன் பின் நடக்கப்போவதை சிந்திக்க நேரமுண்டோ
பேரமுண்டோ - நெஞ்சு நெகிழ்வதைத் தவிர வேறு வழியிண்டோ

No comments: