Wednesday, November 25, 2009

மூதுரை - எளிய சொற்கள்.. அரிய பாடல்கள்

அனைத்து பாடல்களும் பழமொழி பாணியில், ஒரு முறை படித்தாலும் என்றும் நினைவில் நிற்கும்படி அமைந்திருக்கிறது.

நன்றி

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1

சொற்கள் :
தளரா வளர்தெங்கு - தளராமல் வளரும் தென்னை : தாளுண்ட - தான் உண்ட


இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு 3

பொருள் :
இளமையில் வறுமை இன்னா (துன்பம்)
இன்னா அளவில் (முதுமையில்) இனியவும் (செல்வம்) இன்னா.

அட்டாலும் பால் சுவையில் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும் 4

அட்டாலும் - காய்ச்சினாலும்
அளவளாய் நட்டாலும் - நட்பு கொண்டாலும்.



நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று 8

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பத தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாத தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல். 11

அளவின்றி - துணையின்றி

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி 14

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு 17

1 comment:

Unknown said...

சிறப்பு